லஞ்ச ஒழிப்பு துறை ரீதியான வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவரது வாரிசுகள் அரசு வேலை உரிமை கோர முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணிபுரிந்த தன்ராஜ் என்பவர் அரிசி ஆலை ஒன்றின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக 2020ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதியப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட ரூ. 56.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தன்ராஜ் மரணம் அடைந்துள்ளார்.
தன்ராஜ் மரணமடைந்த்ததால் பணம், சொத்து ஆவணங்களை தங்களிடம் திருப்பித் தரக் கோரி அவரது மனைவி அங்கயற்கண்ணி, மகன் ஹரிபிரதாப், மகள் ஹரிப்பிரியா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்தனர். மருத்துவமனை கட்டுவதற்காக பலரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் தன்ராஜ் குடும்பத்தினர் வாதம் செய்தனர். மேலும் தந்தை இறந்த பின்னர் அவரது அரசு வேலை வாரிசுகளுக்கு உண்டு என்பது ரீதியாக சில கருத்துகள் வாதிடப்பட்டன.
மரணமடைந்த தன்ராஜோ, அவரது வாரிசுகளோ பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சமர்பிக்கவில்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டப் பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள், லஞ்ச ஒழிப்பு துறை ரீதியான வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவரது வாரிசுகள் அரசு வேலை உரிமை கோர முடியும் என்று அதிரடியான தீர்ப்பு ஒன்றினை வழங்கினார்.
Discussion about this post