கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தியதாக 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 525 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அறிவித்துள்ளது. 444 டன் ரேசன் அரிசி, 75லிட்டர் மண்ணெண்ணை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை வடக்கு, சென்னை மேற்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,கள்ள்க்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்கள் தடுக்கும் பொருட்டு சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை சென்னை மண்டலத்தில் மட்டும் அத்தியாவசிய பொருட்களை கடத்தியதாக மொத்தம் 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 525 நபர்களை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி சுமார் 444 டன் பறிமுதல் செய்யப்பட்டு, பொது விநியோக திட்ட மண்ணெண்ணை சுமார் 75லிட்டர், கலப்பட ஆயில் சுமார் 24,0700 லிட்டர் மற்றும் சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதாக 445 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக நான்கு சக்கர வாகனங்கள் 107, மூன்று சக்கர வாகனங்கள் 28, இரண்டு சக்கர வாகனங்கள் 96 என மொத்தம் 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 1200க்கும் மேற்பட்ட வழக்குகள் டி.ஆர்.ஓ நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதிமன்றத்திலும் தண்டனையில் முடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 81 நபர்கள் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் எட்டு நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 128 நபர்களில் 75 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் நன்னடத்தை பிணையம் பெற்றபின் குற்றச்செயலில் ஈடுபட்ட 12 நபர்களை மீது வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 232 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Discussion about this post