தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் சக மாணவரின் குடிநீரில் பூச்சிக்கொல்லிஅயி கலந்ததாக வெளியான செய்திதான் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சி அளித்த வண்ணம் உள்ளது. இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்திருக்கிறது.
என்ன நடந்தது…!
அதாவது வீட்டுப்பாடத்தினை முடிக்காத இரு மாணவர்களை வகுப்பில் லீடராக உள்ள மாணவர் ஆசிரியரிடம், இரு மாணவர்களும் வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்மாணவர்கள், வகுப்பு லீடர் குடிக்கின்ற தண்ணீர் பாட்டிலில் பூச்சி மருந்தினைக் கலந்துள்ளார்கள். முதலில் தண்ணீரைக் குடித்த வகுப்பு லீடர் தண்ணீரின் சுவை வேறுமாதிரி உள்ளது என்பதை உணர்ந்து துப்பியுள்ளார். பின்னர் அருகிருந்த சக மாணவருக்கு தண்ணீரை பகிர்ந்திருக்கிறார். அந்த மாணவருக்கும் தண்ணீரின் சுவை வேறுமாதிரி இருந்துள்ளதால் நீரைத் துப்பியுள்ளார். இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வருகிறார்கள்.
தவறு செய்த இரண்டு மாணவர்களும் வகுப்பு லீடருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுத்த வேண்டும் என்றுதான்நினைத்திருந்ததாகவும் அதற்கான மாத்திரை ஏதும் கிடைக்கவில்லை என்பதால் விவசாய நிலத்தில் அடிக்கும் பூச்சிக்கொள்ளி மருத்தினை எடுத்து வந்துவிட்டோம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இந்த விசயம் இவ்வளவு அபாயகரமாக மாறும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளனர். ஆனால் என்ன செய்ய தவறு இழைத்தவர்கள் அதற்கான தண்டைனையைப் பெற்றுத்தானே ஆகவேண்டும். தவறு செய்த சிறுவர் இருவருக்கும் ஐபிசி செக்ஷன் 328-ன் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஐபிசி 328…!
இந்திய தண்டனைச் சட்டம் 328- சொல்வது என்னவென்றால் போதைப்பொருள் அல்லது விஷம் போன்றவற்றால் சக மனிதருக்கு காயம் ஏற்படுத்துவதோ உயிருக்கு ஆபத்து விளைப்பதோ ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இந்தக் குற்றத்தில் ஈடுபடும் ஒருவருக்கு பத்தாண்டு கால சிறை தண்டனையும், கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும். தற்போது இந்த இரு சிறார்களும் இந்தத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தன் வருங்கால வாழ்வை இழந்து கேள்விக்குள்ளாகியுள்ளனர்.
மாணவர்களின் உளவியல் சிக்கல்..!
இது மாதிரியான சிறார் குற்றங்கள் முதலிலேயே கண்டுகொண்டு களைந்திருக்க வேண்டியது இந்த ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும். கால வெள்ளத்தில் பிஞ்சுக் குழந்தைகளாக இருக்கும் நமக்குள் வளர வளர எதோ ஒரு குரூர எண்ணமும் பழிவாங்கும் உணர்ச்சியும் வன்மமும் ஆழ்மனதில் வந்துகொண்டே இருக்கும். இது நிரந்தரமான உணர்வுகளா அல்லது தற்காலிகமாக இருக்குமா என்பது அந்தந்த மனிதர்களுக்கே வெளிச்சம். ஏன் ஒரு நபர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே குரூர மனநிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு பெற்றோர்களே காரணகர்த்தாவாக அமைகிறார்கள். நம் வருங்காலத்தை சிறப்பாக பேணி நல்முறைபடுத்தும் பண்பை பெற்றோர்களே வகுத்துக் கொடுக்க வேண்டிய சமுதாய கடமையில் உள்ளனர். ஆனால் அவர்கள் அதை செய்ய தவறும் பட்சத்தில் தீங்குகள் விளைகின்றன. பிறகு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் பங்கு இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களால் முறையாக பேணப்படாத குழந்தைகள், ஆசிரியர்களால் நல்வழிப்படுத்தப்படுவர். ஆனால் ஆசிரியர்களும் பெரிதாக மாணவர்களை கண்டுகொள்ளவில்லை என்றால் குற்றங்கள் பெருகத்தான் செய்யும்.
ஒன்றே ஒன்றுதான் இவ்வுலகை வன்முறையில்லாமல் கட்டமைக்கும். அது கட்டுப்பாடற்ற அன்பு. சக மனிதனை மனிதனாக நடத்தும் பண்பும், அவர்களுக்கு நாம் தரும் உரிய மரியாதையும் மாண்பும், நிபந்தனையற்ற அன்பும் அரவணைப்பும் ஒருவனை இவ்வுலகின் தூயனாக மாற்ற முடியும். அதற்கான அடித்தளத்தை பிஞ்சில் இருந்தே விதைப்பது இச்சமூகத்தின் கடமை.
Discussion about this post