விடியா திமுக ஆட்சியில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படாதது போன்ற கட்டமைப்பு வசதிகளில் நிகழ்ந்த குறைகளை சுட்டிக்காட்டி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. இதனால் இந்த மூன்று மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ள 500 எம்.பி.பி.எஸ். இடங்கள் ரத்தானதால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு பாழானது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறையின் அலட்சியம் குறித்து மாணவர்களின் பெற்றோர்களும், கல்வியாளர்களும், எதிர்க்கட்சித்தலைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் சந்தித்தனர். அப்போது தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்தது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்ததால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகள் மேலும் ஐந்து ஆண்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கலூரியின் அங்கீகாரம் ரத்து தொடர்வதாகக் கூறப்படுகிறது.
மருத்துவக்கல்லூரிகளின் விவகாரத்தில் தமிழக அரசு கோட்டை விட்ட விவகாரம் அம்பலமான நிலையில், தற்போது அதே திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா. அரசு கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்து ரத்தாகி உள்ளதாக வெளியான தகவலால் தமிழக உயர்கல்வித்துறை மீது அதிருப்தி கிளம்பியிருக்கிறது.
திருச்சி காஜாமலையில் கடந்த 1965ல் தொடங்கப்பட்ட ஈ.வெ.ரா அரசு கலைக்கல்லூரி 1999ல் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இங்கு இளங்கலை, முதுகலை படிப்புகளில் 15 துறைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழுவான யூ.ஜி.சியில் புதுப்பிக்க வேண்டும். ஆனால், ஈ.வெ.ரா அரசு மருத்துவக்கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிப்பது தொடர்பாக கடந்த 2021ல் மாநில உயர்கல்வித்துறை வாயிலாக விண்ணப்பித்த நிலையில், இதுவரை தன்னாட்சி அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. விண்ணப்பம் செய்த ஆண்டுக்கு பின்னால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களின் பட்டங்களும் செல்லுபடியாகாது என்னும் தகவலால் மாணவர்கள் அதிர்ந்து கிடக்கிறார்கள். தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தையும் அது கேள்விக்குறியாக்கி உள்ளது. கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்தை புதுப்பிப்பது தொடர்பாக, கல்லூரி தேர்வுத்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும் அதிருப்தி கிளம்பியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கே, அங்கீகார விண்ணப்பம் கிடப்பில் உள்ள விஷயம் தெரியுமா தெரியாதா என்பதே கேள்விக்குறி என்கிறார்கள் ஈ.வெ.ரா கல்லூரி பேராசிரியர்கள் சிலர்.
மக்கள் நல்வாழ்வுத்துறையின் அலட்சிய செயல்பாட்டால் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்து தொடர்வது… பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் 247 விளையாட்டு மாணாக்கர்கள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க இயலாமல் போனது… என்று விடியா ஆட்சியில் அமைச்சர்களின் செயலற்ற தன்மை சந்தி சிரிக்கும் நிலையில், தற்போது உயர்கல்வித்துறையின் ஏனோ தானோ செயல்பட்டால் திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரமும் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
முதலமைச்சர் பின்னாலும், வாரிசு அமைச்சர் பின்னாலும் சுற்றுவதை நிறுத்திவிட்டு துறைசார்ந்த நடவடிக்கைகளில் அமைச்சர்கள் அக்கறை காட்டினால் மட்டுமே, தமிழகம் உண்மையான விடியல் பெறும்.
Discussion about this post