வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருவதுபோல ப்ளூடூத் மாட்டி தேர்வு எழுதிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது. ப்ளூடூத், பட்டன் கேமரா சகிதம் தேர்வெழுத சென்ற வசூல் ராஜா குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் மற்றும் எந்திரன் திரைப்படங்களில் பலரையும் சிரித்து ரசிக்க வைத்த இந்த காட்சிகள் நிஜத்திலும் அரங்கேறியுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் பொறியியல் துணை சேவை பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை உள்ள தேர்வு மையத்தில் ஆயிரக்கணக்கானோர் தேர்வெழுதினர்.
தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்வு அறையில் இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தேர்வுக் கண்காணிப்பாளர் அவரை மீண்டும் சோதனையிட்டுள்ளார். அப்போது அந்த இளைஞரிடம் பட்டன் கேமரா, ப்ளூடூத், டிரான்ஸ்மிட்டர் என நவீன சாதனங்கள் அனைத்தும் இருப்பது கண்டு கண்காணிப்பாளர் அதிர்ந்தார்.
இதுகுறித்து புதுக்கோட்டை நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தில்லமுல்லு இளைஞரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊகான்வயல் பகுதியைச் சேர்ந்த தர்மர் என்பது தெரியவந்தது. ஈரோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் தர்மர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகியுள்ளார்.
தேர்வில் தன்னால் தேர்ச்சி பெற முடியாது என்பதை உணர்ந்த தர்மர் தில்லாலங்கடி வேலை செய்து பாஸ் பண்ண முடிவு செய்தார். இதுதொடர்பாக கல்லூரி நண்பரான பரணிதரனிடம் சேர்ந்து ஆலோசித்துள்ளார். பின்னர் இருவரும் எந்திரன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில் சீட்டிங் செய்ய முடிவு எடுத்து இந்த தில்லமுல்லு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இவர்களின் பிளான் படி தர்மர் தனது சட்டைப் பையில் பட்டன் கேமரா, டிரான்ஸ்மிட்டர் வைத்துக் கொண்டும், காதில் ப்ளூடூத் மாட்டி தேர்வறைக்குள் செல்வதும், பின்னர் பட்டன் கேமரா மூலம் வினாத்தாளை காண்பித்து அதை வெளியே இருந்து பரணிதரன் பார்த்து அதற்குரிய பதிலை கூறுவதும், அதை ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் தேர்வறைக்குள் இருக்கும் தர்மர் கேட்டு எழுதுவது என பக்காவான ஸ்கெட்ச் போடப்பட்டது.
இதேபோல, தேர்வு மைய சோதனைகள் அனைத்தையும் கடந்து அறைக்குள் சென்ற தர்மர், சிக்னல் சரியில்லாத காரணத்தால் கொஞ்சம் சத்தமாக பேசியபோது சிக்கிக் கொண்டார். தற்போது தர்மரை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி பரணிதரனை தேடி வருகின்றனர்.
மாநில அளவில் முக்கியமான டிஎன்பிஎஸ்சி தேர்வில் இளைஞர் ஒருவர் அத்தனை சோதனைகளையும் கடந்து தில்லமுல்லில் ஈடுபட்ட சம்பவத்தின் மூலம் தேர்வின்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளின் லட்சணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
– செய்தியாளர் ராஜேஷ் மற்றும் சித்தார்த்.
Discussion about this post