“பாளையம் பண்ணப்புரம் சின்னத்தாயி பெத்தமகன் பிச்சமுத்து ஏறியே வரண்டோ” என்ற பாடலுக்கு ஏற்றபடி அனைவரின் மனதில் ஏறி அமர்ந்து இருக்கிறார் இளையராஜா. தன்னுடைய இசைப் பயணத்தில் எத்தனையோ தடைக் கற்கள் வந்தாலும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் தென்னகத்தின் பக்கம் திருப்பிய ஒரே இசை ஆளுமை இளையராஜா ஆவார். அன்று பேரறிஞர் அண்ணா தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டமானது களப் போராட்டமாக இருக்க, எழுபதுகளில் இந்தி இசையை தமிழ் இசையால் விரட்டியடித்த கலைப் போரட்டத்தை செய்தவர் இளையராஜா.
இளையராஜாவின் முதல் பட வாய்ப்பு அவருக்கு 1975ல் பஞ்சு அருணாச்சலம் மூலம் கிடைக்கிறது. முதல் படமே அன்னக்கிளி. அத்திரைப்படம் இன்று மே 14ல் தான் வெளியாகி உள்ளது. இன்றுடன் இளையராஜா தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இந்தி இசையின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் திரையுலகை “மச்சான பாத்திங்களா” பாடல் மூலம் வயல்வெளிவரை தமிழ் இசையைப் பரவச் செய்த பெருமை இளையராஜாவையேச் சாரும். என்பதுகளில் பிறந்தவர்களிலிருந்து இரண்டாயிரங்களில் பிறந்தவர்களுக்கும் இளையராஜா தன் இன்னிசையை காதிற்கு விருந்தாக்கியுள்ளார். அவரது ஆயிரமாவது படம் “பரதேசி” ஆகும். அதிலும் இந்தத் தலைமுறைக்கு ஏற்ற துள்ள இசையை மெருகேற்றி இசைத்திருப்பார்.
ரஜினி, கமல் தொடங்கி தற்போதைய இளம் கதாநாயகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி என்று பல நடிகர் பட்டாளங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அன்றைய காலக்கட்டத்தில் நடிகர் இருக்கிறாரோ இல்லையோ இளையராஜா இசை இருந்தாலே போதும் திரைப்படத்தினைப் பார்க்க பொதுமக்கள் திரையங்கில் கூடிவிடுவர். அவர் இசையால் 100 நாட்கள் ஓடிய படங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. மேலும் தான் இசையமைக்கும் திரைப்படத்தின் இயக்குநர் புதுமுக இயக்குநராக இருந்தால் சம்பளம் வாங்காமலேயே இசையமைக்கும் பண்புடையவர் இளையராஜா. அவரது நாற்பத்து ஏழு ஆண்டு இசைப் பயணத்தை இரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
Discussion about this post