அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் ஒரு களிமண் என்றும், சசிகலாவின் கைப்பாவையாக அவர் உருவாக்கப்பட்டதாகவும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சந்தித்தார். அப்போது, மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுகவின் எம்.பி என அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த மனுவை அவர் நேரில் சமர்ப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறித்து பேசியதாகவும், மனு குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் ஒரு கருத்தையும், பொது வெளியிலும் வேறு ஒரு கருத்தையும் கூறி மக்களையும், அவரை நம்பி வந்தவர்களையும் ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பன்னீர் ஒரு கபடதாரி என்று காட்டமாக தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே என்பதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதை குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவின் பெயரையோ, கொடியையோ வேறும் யாரும் பயன்படுத்த தார்மீக உரிமை இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் சட்டவிரோதமாக பயன்படுத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்தார்.
பன்னீர்செல்வம், தினகரன் சந்திப்பு எந்த ஒரு தாக்கத்தையும் அதிமுகவில் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி அதிமுக எம்.பி, சி.வி.சண்முகம், சசிகலாவின் கைப்பாவையாக உருவாக்கப்பட்டவர் தான் பன்னீர் என்றும், அவர் யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை என்றும் விமர்சித்தார்.
சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தியது பன்னீர்தான் என்று குறிப்பிட்ட அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், தினகரன்தான் தன்னை ராஜினாமா செய்ய கட்டயாப்படுத்தியது என்று குற்றம்சாட்டிய தினகரனோடு தான் பன்னீர் தற்போது உள்ளார் என்றும் விமர்சித்தார்.
அ.தி.மு.க இயக்கத்தை பிளவுபடுத்தியவர் பன்னீர்தான் என்று குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலாவையும், தினகரனையும் எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர்தான் பன்னீர் என்று விமர்சித்தார்.
Discussion about this post