இன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடும் நிலையில் கல்லீரலின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றை நல்லமுறையில் பாதுகாப்பது பற்றியும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.
ஆரோக்கியமான கல்லீரலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரல் தொடர்பான நோய்கள் பற்றிய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேல்தோலுக்குப் பிறகு, கல்லீரல் உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு ஆகும். அதேபோல் மூளைக்குப் பிறகு, மிகவும் சிக்கலான உறுப்பு கல்லீரல் என்கிறது மருத்து உலகம்.
நமது உடல் சரியாகவும், சுறுசுறுப்புடனும் இயங்குவதற்குத் தேவையான பல்வேறு செயல்முறைகளுக்கு கல்லீரல் பொறுப்பேற்கிறது. கல்லீரலின் எந்தவொரு செயலிழப்பும் குறிப்பிடத்தக்க உடல்நலக் கவலைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக ஹெப்படைடிஸ், கல்லீரல் அழற்சி மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பெரிய நோய்களைத் தவிர்ப்பதற்கு நமது கல்லீரலை சரியான முறையில் கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். இதனை வலியுறுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ம் தேதியை உலக கல்லீரல் தினமாக உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரலின் செயல்பாடுகள் முக்கியமானவை. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், வளர்சிதை மாற்றம், ஊட்டச்சத்து சேமிப்பு என பல்வேறு பணிகளையும் ஒவ்வொரு நிமிடமும் செய்வது இந்த
கல்லீரல்தான். மேலும், ரத்தம் உறைதல் கல்லீரலால் கட்டுப்படுத்தப்படுவதோடு, உடலில் உள்ள பிற நச்சுப் பொருட்களை உடலில் இருந்து அகற்றுவதிலும் கல்லீரல் பங்களிக்கிறது.
குடிப்பதனால் மட்டுமல்லாமல் வேறு பல காரணங்களும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். குடிப்பழக்கம் தவிர்ப்பது, சீரான உணவு, உடற்பயிற்சி செய்வது ஆகியவையே கல்லீரல் நோய்களை கட்டுப்படுத்துவதால் அதனை தொடர வேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.
நமது உடலின் இயக்கம் சீராக இருப்பதற்கு கல்லீரலின் செயல்பாடும் சீராக இருக்க வேண்டும். அதனால் மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி கல்லீரலை காப்போம்; வாழும் நாளை அதிகரிப்போம்!
– செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசாத்.
Discussion about this post