புராதன பெருமை கொண்ட உத்திரமேரூர் அருகே முதன்முறையாக முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழியை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு செல்லும் நிலையில், அந்தப் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்வார்களா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புராதன பெருமை கொண்ட பகுதி உத்திரமேரூர்… பல தொன்மையான கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. அதே போல சோழர்காலத்திய குடவோலை தேர்தல் முறைகள் பற்றி விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டும் கிடைத்துள்ளது. இப்படி பல்வேறு புராதன பெருமைகள் இருந்த போதும் முதன்முறையாக உத்திரமேரூர் பகுதியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரி கிராமத்தில் கரிய மாணிக்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. கோயிலின் புனரமைப்பு பணியானது கடந்த சிலமாதங்களாக நடைபெற்று வருகிறது. புதன்கிழமை காலை, கட்டுமான பணியாளர்கள் கோயில் அருகே தொட்டி கட்டுவதற்காக சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டினர். அப்போது பள்ளத்தின் ஒரு புறத்தில் பானை வடிவில் ஏதோ ஒரு பொருள் இருக்க, அதனைப் பார்த்தபோது முதுமக்கள் தாழி என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து கட்டுமான பணியை நிறுத்திவிட்டு, இதுகுறித்து வருவாய்துறையினருக்கும் அரசு அலுவலர்களுக்கும் கோயில் பணியாளர்கள் தகவல் அளித்தனர். இதனிடையே முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட செய்தி பரவே, பொதுமக்கள் அதனை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
தொன்மைத் தமிழரின் வாழ்வியல் அடையாளமான முதுமக்கள் தாழி முதன்முறையாக உத்திரமேரூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த இடத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் முதுமக்கள் தாழி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொல்லியல் சின்னம் ஒன்று கிடைத்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடருமா? அல்லது தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த இடத்தை கைப்பற்றி ஆய்வு மேற்கொள்வார்களா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.
– செய்தியாளர் சுரேஷ் மற்றும் ஆசாத்.
Discussion about this post