நாளை (ஏப்ரல் 4) இந்தியா முழுவதும் மகாவீரர் ஜெயந்தியானது அனுசரிக்கப்படுகிறது. ஜைனர்கள்(சமணர்கள்) இந்த விழாவினை சிறப்பாக கொண்டாட ஆயத்தம் ஆகி வருகிறார்கள். அவர்கள் மகாவீரரை 24வது தீர்த்தங்கரராக வழிபடுகின்றனர். மகாவீரரை இவர்கள் வழிபட என்ன காரணம்? அவருக்கு பின் உள்ள வரலாற்று சிறப்பு என்ன? என்று இங்ஙனம் நாம் தெளிவாக காண்போம்.
மகாவீரர் வரலாறு..!
மகாவீரர் பீகாரில் வைசாலி அருகில் உள்ள குண்டகிராமா என்கிற பகுதியில் பிறந்தார் என்று சமணர்களால் நம்பப்படுகிறது. அவரது தந்தையின் பெயர் சித்தார்த்தன். தாயின் பெயர் திரிசலா. இவர்கள் இருவரும் அரசன் அரசி ஆவார்கள். மகாவீரர் பிறக்கும்போதே இளவரசர் பட்டத்துடன் பிறந்தவர். பட்டத்து இளவரசாக இருந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வாழ்வானது சலிப்பினை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அரச வாழ்க்கையை விட்டு ஆன்மீக வாழ்க்கையில் காலெடுத்து வைத்தார்.
மெஞ்ஞானம் அடைதல்..!
தனது முப்பதாவது வயதில் மகாவீரர் தன்னுடைய அரசப்பட்டத்தைத் துறந்து துறவியாக வாழ்ந்தார். அவரது 43வது வயதில் ரிஜூபலிகா ஆற்றங்கரையில் உள்ள சாலா மரத்தடியில் ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பீகாரின் பவாரியில் நிர்வாணா (மரணம்) அடைந்தார். ஒவ்வொரு தீபாவளி பண்டிகை அன்று சமணர்கள் விளக்கேற்றி மகாவீரருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அவர் இறந்த அன்று அவரது போதனைகள் அனைத்தும் மெய்ஞானம் அடைந்ததாக சமணர்கள் போற்றி வருகின்றனர். அவை 12 புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன. ஆனால் கிமு 300ல் மகத நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக மகாவீரரின் பெரும்பாலான போதனைகள் காணமல் போய்விட்டன என்று சொல்லப்படுகிறது.
மகாவீரரின் போதனைகள்..!
ஒருவர் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் சுழற்சி முறையில் இருந்து விடுபடுவதற்கு ஆன்மீகம் என்கிற மெய்ஞானத்தினை அடைய வேண்டும் என்று மகாவீரர் கூறினார். அதிலும் முக்கியமாக ஐந்து கொள்கைகளை அவர்கள் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அவை
1. அகிம்சை 2. சத்யம் 3. திருடாமை 4. பிரம்மச்சாாியம் 5. பற்றின்மை
ஆகிய ஐந்தும் ஆகும்.
மகாவீரர் ஜெயந்தி..!
மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவதன் நோக்கம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கடைபிடிப்பதற்கான விழிப்புணர்வின் பொருட்டு ஆகும். இந்த நாளில், மகாவீரரின் போதனைகள் அவரது சீடர்களினால் பிரசங்கங்களாக பரவுகின்றன. மகாவீர் ஜெயந்தி என்பது உலகம் முழுவதும் வாழும் சமணர்களால் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். குதிரைகள், யானைகள், தேர்கள், கோஷமிடுபவர்கள் உட்பட பெரிய ஊர்வலங்கள் நடத்தப்படும். மேலும் ஜெயின் துறவிகள் மகாவீரர் வகுத்த ஜைன மதக் கொள்கைகளைப் பற்றி பேசும் சொற்பொழிவுகளை வழங்குகிறார்கள்.
Discussion about this post