”த ஜங்கள் புக்” என்கிற ரூட்யார்ட் கிப்ளிங் எழுதிய நாவலானது திரைப்படமாக எடுக்கப்பட்டு அனைவரின் வரவேற்பையும் பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அத்திரைப்படத்தின் கதாநாயகனான “மோக்லி” கதாபாத்திரம் கவர்ந்தது. இந்த மோக்லி கதாபாத்திரத்தின் அடிநாதம் இந்தியாவிற்கு சொந்தமானது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும்.
1867 ஆம் ஆண்டு உத்தரபிரதேச புலந்தசகர் காட்டுப் பகுதியில் வேட்டைக்கு சென்ற வேட்டைக்காரர்கள் தினா சனிச்சர் எனும் ஆறு வயது சிறுவனைக் கண்டறிந்து ஆதரவற்ற விடுதியில் கொண்டுபோய் சேர்த்தனர். தினா சனிச்சரை காட்டுக்குள் இருந்த ஓநாய்கள் வளர்த்தன என்ற சில செய்திகளைக் கேட்டு அது உண்மைதானா என்கிற கேள்விக்கான விடையைத் தேட வேட்டையர்கள் சென்றுள்ளனர். அவர்களுக்கான பதில் ஆம் என்றுதான் சொல்லியிருக்கிறது புலந்தசகர் காடு. தினா சனிச்சர் தனது ஐந்து வயது வரை தன்னை ஒரு ஓநாயாகவே உணர்ந்துள்ளார். இவரை வேட்டைக்காரர்கள் கண்டறிந்தது கூட ஒரு குகையில்தான். விடுதியில் இவருக்கு சில மிஷனரிகள் பேசுவதற்கு பயிற்சி அளித்துள்ளனர். ஆனால் அவரால் அதனை புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர் ஓநாயின் பாஷையைப் பேசியுள்ளார். உணவாக உட்கொண்டதுகூட பச்சை இறைச்சியைத்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அவரை பராமரித்து வந்த விடுதியின் பெயர் சிக்கண்டரா. அவ்விடுதி இவருக்கு நவநாகரீக மனிதனின் தன்மையைக் கற்றுக்கொடுத்துள்ளது. ஆனால் அவரால் அதனை உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவரை வுல்ப் பாய் என்கிற அடைமொழியுடனே விடுதிக்காரர்கள் அழைத்தனர். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பச்சைக்கறியினை தொடர்ந்து உண்டு வந்ததால் ஓநாயின் பற்களைப் போலவே கூர்மையாக மாறியிருக்கிறது.. மேலும் கைகளைக் கால்களாய் பயன்படுத்தி நான்கு கால்களில் நடந்துள்ளார். பிறகு அவருக்கு சைகை மொழியினை கற்றுக்கொடுத்துள்ளனர், நடக்க பயிற்சி அளித்துள்ளனர், உடை அணிய பழக்கியுள்ளனர். ஆனால் அவரால் சரிவர நாகரீக மனிதனின் பண்பினைப் பெற முடியவில்லை. மனிதர்கள் உண்ணக்கூடிய சாதாராண உணவையும் அவரால் உண்ண முடியவில்லை. அதனை அவர் தூர எறிந்துள்ளார்.
தன்னுடைய முப்பத்து ஐந்தாவது வயதில் சனிச்சர் காசநோய் ஏற்பட்டு இறந்துள்ளார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுதான் ரூட்யார்ட் கிப்ளிங் ”த ஜங்கிள் புக்” என்கிற புத்தகத்தை எழுதியதாக பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அது பிற்பாடு திரைப்படமாக வெளிவந்து சக்கைப்போடு போட்டக் கதை உலகறியும்.
Discussion about this post