சர்வதேச பொருளாதாரம், தொழில்நுட்பம், உற்பத்தியில் ஜப்பான் நாடு முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், ஜப்பானின் மக்கள்தொகை வேகமாகக் குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், இந்தாண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பானின் நிலை தலைகீழாக உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி அந்நாடு வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு, ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துஇருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியா குறைவான கருவுறுதல் விகிதத்தைக் கொண்டிருந்தாலும், ஜப்பானின் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருவது பெரும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஜப்பான் 1950 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்து வரும் நிலையில் 2021ஆம் அண்டில் 6,44,000 தான் மிகவும் மோசமான சரிவு என ஜப்பான் நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் மசாகோ மோரி அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜப்பான் அதன் பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சியைக் குறைக்க முடியாவிட்டால், ஜப்பான் இல்லாமல் போய்விடும் என தெரிவித்துள்ளார். அழியப் போகும் சூழலை மக்கள்தான் எதிர்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தொகை வீழ்ச்சி குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். வேகமாக குறைந்து வரும் மக்கள்தொகை பிரச்சினையை சரி செய்ய குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மீது இரண்டு மடங்கு அதிகமான தொகை செலவிடப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post