அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, உணவுப் பொருள்களின் விலை உச்சம் என படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் ராணுவத்தினர் பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ராணுவ வீரர்களை பட்டினி போடும் அளவிற்கு பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இந்த வீழ்ச்சியை இன்று , நேற்று சந்திக்கவில்லை. கொரோனா நோய்த் தொற்று காலத்தில் இருந்தே சந்தித்து வருகின்றது. கடந்த 2021ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கே ஊதியம் கொடுக்க முடியாத நிலை இருந்ததென்றால் நிலவரம் எவ்வளவு இக்கட்டிற்கு சென்றது என புரிந்து கொள்ளுங்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அந்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. விவசாயப் பொருள்களின் உற்பத்தியும் பாதித்தது. தற்போதைய சூழ்நிலையில் அந்த நாட்டின் பணவீக்கம் நாளுக்குநாள் உயர்ந்து வருகின்றது. உணவுப் பொருள்களின் மொத்த விலையானது 30 லிருந்து 50 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. உலக நாடுகளிடமும், உலக வங்கியிடமும் கடன் கேட்க பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் உலக வங்கி பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் உள்ளது என கூறி கடன் வழங்க மறுத்துவிட்டது. சீனாவிடம் ஏற்கனவே கடனை வாங்கிக் குவித்திருந்த நிலையில், மறுபடியும் அதனிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. நிலைமை இப்படி மோசமாக போய்க்கொண்டிருக்க எல்லையில் நின்று பாதுகாத்து கொண்டிருக்கும் ராணுவவீரர்கள் பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வீரர்களுக்கு 2 வேளை உணவு வழங்குவதில் கூட ராணுவம் திணறி வருகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ராணுவ தளபதி ஆசிம் முனீர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தளவாடங்கள் மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு ஆகும் செலவை குறைக்க முடியாது. இது எல்லை பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதிக்கும் என ராணுவம் அச்சம் தெரிவித்துள்ளது. ஆட்சியாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர். இலங்கை பொருளாதார நிலை மோசமாகி அந்த நாட்டு மக்கள் ஆட்சியாளர்களை விரட்டியடித்தனர். ஆட்சி மன்றங்களை தீயிட்டு கொளுத்தினர். தற்போது பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கண்முன்னே அந்த சம்பவங்கள் எல்லாம் வந்து போகின்றது என்ற பேச்சுகள் அடிபடுகின்றது.
Discussion about this post