நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற உரிமைக்குரல் விவாத நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி திமுகவினர் புடவை, கொலுசு, குக்கர், பணம் போன்ற பரிசுகளைக் கொடுத்து வாக்காளர்களைக் கவரும் செயலில் ஈடுபடுவதைக் குறித்த விவாதம் நடைபெற்றது. பெண்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கான பரிசுகளாக திமுகவினர் வழங்கியிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? என்கிற நெறியாளரின் கேள்விக்கு, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அரசியல் விமர்சகர் நாச்சியாள் சுகந்தி அவர்கள் பின்வருமாறு பேசியுள்ளார்.
நாச்சியாள் சுகந்தி :
பெண்களைக் குறிவைத்து அரசியல் செய்வதற்கு திமுகவில் ஆட்கள் கிடையாது. பெண்களுக்கான மேலாண்மை சார்ந்து பேசக்கூடியதற்கு திமுகவில் ஆட்கள் இல்லை என்பதை நான் சவாலாக கூறுகிறேன். பெண்களை கவரும் விதமாக இவர்கள் கொடுக்கும் பொருட்கள், முக்கியமாக குங்குமச் சிமிழ் போன்ற உணர்ச்சிப்பூர்வமான பொருட்கள் தருவது திமுகவிற்கு எதிராக மாறும். ஏனென்றால் ஈரோடு கிழக்கு என்பது முழுக்க முழுக்க கிராமப்புறம் கிடையாது. அங்கே ஓரளவிற்கு படித்தப் பெண்கள் பலர் உள்ளனர். குக்கருக்கும், கொலுசுக்கும், குங்குமச் சிமிழுக்கும் மயங்கும் பெண்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். அந்தப் பொருட்களின் மதிப்பு என்ன என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக 1.90 லட்சம் கோடியை கடன் வாங்கி அதில் நூறு கோடியை ஈரோடு கிழக்கிற்கு பயன்படுத்தி வருகிறது. மக்கள் நம்மைவிட புத்திசாலிகள். திருமங்கலம் பார்முலா போல ஈரோட்டிலும் ஜெயிக்கலாம் என்று திமுக இதனைச் செய்கிறது.
கடந்த வாரம் லயோலா கல்லூரி பழைய மாணவர்கள் ஈரோடு கிழக்கில் கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அதில் இந்த ஆளும் அரசின் மீது அத்தொகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக புள்ளி விவரங்களில் தெரியவந்தது. முக்கியமாக நீங்கள் திரு.ஸ்டாலின் அவர்களை சிறந்த முதல்வராக பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு, இவருக்கு முன்பு இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களே சிறந்த ஆட்சியைக் கொடுத்தார் என்று அந்த சர்வேயில் சொல்லப்பட்டிருந்தது. எதிர்கட்சித் தலைவரின் பிரச்சாரத்தினைப் பார்த்து பயத்தில் உள்ளனர். பயம் வந்தவர்கள் ஒருவித உச்சக்கட்ட விரக்திக்கு சென்று வெறி பிடித்தவர்கள் போல நடந்துகொள்வார்கள். அந்த வெறியின் வெளிப்பாடுதான் இதுபோன்ற பரிசுப் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்வது.
தமிழ்நாடு காங்கிரசில் பெரிய பேச்சாளர்கள் என்று யாரும் இல்லை. இதனால் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்கின்ற அவலம் ஏற்பட்டிருக்கிறது. அரசியலில் ஒரு மூத்த தலைவர் ஈவேகேஎஸ் இளங்கோவன், அவருக்கு அரசியலில் எந்த ஒரு அனுபவமும் பேச்சாற்றலும் இல்லாத உதயநிதி பிரச்சாரம் செய்யும் அளவிற்கு கொண்டுவந்து விட்டார்களே என்று வருங்காலத்தில் இளங்கோவன் அவர்களெ புலம்பத்தான் போகிறார். ஈவிகேஎஸ்-ஆல் வாயை வைத்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடியாது. இது கண்டிப்பாக நடக்கும்.
மேலும் பெண்களுக்கு உரிமைத்தொகை அளிக்கும் திமுக அதனை மக்கள் நீதி மைய்யத்திடமிருந்து காப்பி அடித்துள்ளது. திமுக காப்பி அரசியலைத்தான் திரும்ப திரும்ப செய்கிறது. உதாரணத்திற்கு வேளாண் சட்டம் கூட பாமகவிடம் இருந்து காப்பி செய்தது. பெண்கள் சார்ந்த மேலாண்மை குறித்த துளிகூட விழிப்பில்லாத திமுக அளிக்கும் பரிசுகளைப் பற்றி அப்பகுதி பெண்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு 300 ரூபாய் புடவைக்கு மயங்கும் அளவிற்கு பெண்கள் இல்லை. இது தவிர, அரசு ஊழியர்களுக்கு பென்சன் நிறுத்தப்பட்டதால் ஈரோட்டில் உள்ள 5000 அரசு ஊழியர்கள் திமுகவிற்கு எதிராக வாக்களித்துவிடுவார்கள் என்ற பயத்தில் ஓடியோடி ஓட்டு சேகரிக்கிறார்கள். ஆனால் ஈரோடு மக்கள் திமுகவிற்கு கரியைப் பூசுவார்கள் என்பது எனது நம்பிக்கை என்று தனது கருத்தினைப் பதிவு செய்திருந்தார் அரசியல் விமர்சகர் நாச்சியாள் சுகந்தி.
Discussion about this post