துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமானது அந்நாட்டின் தெற்குப்பகுதியில் மிகப்பெரிய பாதிப்பினையும் உயிரிழப்பினையும் ஏற்படுத்தியது. இந்த பாதிப்பு சிரியாவின் வடக்கு மாகாணத்திலும் பரவியிருக்கிறது. இதனால் மொத்தமாக 46000 பேர் வரை இறந்துள்ளனர். பிறகு நியூசிலாந்தில் கடந்த 15ஆம் தேதி 5.7 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது நேற்று மீண்டும் துருக்கி சிரியாவின் மையப்பகுதியில் 6.3 அளவிலான ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அன்டக்யா என்று அழைக்கப்படும் அந்த மையப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
தற்போது சில நில அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. நேற்று மாலை மணிப்பூரில் உள்ள பிஷ்ணுபூர் பகுதியில் ரிக்டர் அளவுபடி 3.6 என்ற அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீரின் கட்ரா பகுதியில் ரிக்டர் அலகில் 3.4 என்ற அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியிலும் ரிக்டர் அலகில் 3.6 என்ற அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
Discussion about this post