தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா? போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பள்ளி கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் உள்ள 1,434 பள்ளிகளில், 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்றும், அந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், அருகில் உள்ள பொது விளையாட்டு மைதானங்களை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரிய விதிகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், இவற்றை காகித அளவிலேயே இனியும் வைக்க அனுமதிக்காமல் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இதனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டது.
Discussion about this post