மதுரை ஆரப்பாளையத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரை, பெற்றோரே கொன்று உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகனை பெற்றோரே எரித்துக் கொல்லும் நிலை ஏன் ஏற்பட்டது என்பதைச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு
ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரம், எரிந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடப்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இதன் பின்னர் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவில் ஒரு தம்பதியினர் இளைஞர் ஒருவரை சாக்கை போர்த்தி சைக்கிளில் கொண்டு சென்ற காட்சி சிக்கியது.
இதையடுத்து அந்த காட்சியில் இருந்தவர்கள் குறித்து நடத்திய விசாரணையில் அவர்கள் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன், கிருஷ்ணவேணி தம்பதி என்பதும், பெற்ற மகனையே கொலை செய்ததும் தெரியவந்தது.
இவர்களுடைய ஒரே மகன் மணிமாறன் திருமணமாகி மனைவியைப் பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மதுவுக்கு அடிமையான மணிமாறன், தினமும் குடித்துவிட்டு வந்து தாய் தந்தையுடன் தகராறு செய்து வந்ததால் அவர்கள் நிம்மதி இழந்து தவித்துள்ளதாகத் தெரிகிறது.
சம்பவத்தன்றும் தகராறில் ஈடுபட்டவரை கோபத்தில் பெற்றோர் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மணிமாறன் உயிரிழக்கவே, செய்வதறியாது தவித்தவர்கள் சடலத்தை வீட்டிற்குள் வைத்துள்ளனர்.
நள்ளிரவில் ஊர் அடங்கிய பின்னர், சாக்கு மூட்டையில் சடலத்தை கட்டி, சைக்கிளில் வைத்து வைகை ஆற்றங்கரைக்கு கொண்டு வந்து, அங்கு வைத்து சாக்குடன் தீவைத்து எரித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆசையாக வளர்த்த மகனின் அடாவடியால் பொறுக்காமல் கொன்ற பெற்றோர், இப்போது கைதாகியுள்ளது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post