ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள், நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என கூறினார்.
இதற்கு, மாநில தேர்தல் ஆணையம் தரப்பு, கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள், நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனிடையே, மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் அக்கறை கொண்டு தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்றைய தினம் இந்த வழக்கு மட்டும் நேரடி விசாரணை முறையில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post