பொங்கல் தொகுப்பில், தரமில்லாத பொருட்களை வழங்குவதற்கும், எண்ணிக்கையை குறைப்பதை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசு வழங்கி வரும் பொங்கல் தொகுப்பில், பொருட்கள் தரமில்லாமல் இருப்பதாகவும், எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொங்கல் தொகுப்புகளில் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறினார்.
பொங்கல் தொகுப்பு தரமில்லாமல் இருப்பதால் ரேஷன் கடை ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், புதன்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post