இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் நோய்தொற்று பாதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் படுவேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 986 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பைவிட 21 புள்ளி 3 சதவீதம் அதிகம்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 ஆயிரத்து 925 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 18 ஆயிரத்து 213 பேருக்கும், டெல்லியில் 17 ஆயிரத்து 335 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 8 ஆயிரத்து 449 பேருக்கும், தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 981 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில், நோய் தொற்றால் 285 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றில் இருந்து ஒரே நாளில் 40 ஆயிரத்து 895 பேர் குணமடைந்துள்ளனர். 27 மாநிலங்களில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 64 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 3 ஆயிரத்து 71ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post