நாளை முழு ஊரடங்கு காரணமாக, சென்னை காசிமேட்டில் மீன்வாங்குவதற்காக பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானோர் வீடுகளில் அசைவ உணவு சமைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் அசைவ பிரியர்கள் இன்றே மீன், இறைச்சி உள்ளிட்டவைகளை வாங்கி இருப்பு வைக்கின்றனர்.
சென்னை காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் குவியத் துவங்கினர்.
பழைய மீன்பிடி ஏலக்கூடம் மற்றும் புதிய மீன் விற்பனை தளத்தில் மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. முகக்கவசம் அணியாமலும், பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமலும் திரண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேப்போல் சென்னை பட்டினம்பாக்கத்தில் பொதுமக்கள் மீன்வாங்க திரண்டனர். சிந்தாதரிப்பேட்டை மீன் சந்தையிலும் அசைவப் பிரியர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மீன்வாங்க குவிந்த பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
Discussion about this post