நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அண்ணா திமுக ஆதரவு அளிக்கும் என்று சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அண்ணா திமுக சார்பில் பங்கேற்று பேசிய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு ரத்து நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அண்ணா திமுக ஆதரவு அளிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு விலக்கு பெறும் வரை நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, மாநில அரசின் மீது மத்திய அரசு திணித்துள்ள நீட் தேர்வு, சிறப்பு பயிற்சி பெறும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் சாதகமாகவும், 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி பள்ளி கல்வி அமைப்பையே அர்த்தமற்றமாக்கியுள்ளது என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்களின் கனவை சிதைப்பதாகவும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் நீட் தேர்வு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post