உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த தொலைநோக்கியாக கருதப்படும் James Webb Space தொலைநோக்கியை அமெரிக்காவின் நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.
பிரபஞ்சத்தின் தொடக்கம் மற்றும் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள கிரகங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சக்திவாய்ந்த James Webb Space தொலைநோக்கியை மெரிக்காவின் நாசா உருவாக்கியது.
10 பில்லியன் டாலர் செலவில், இந்த தொலைநோக்கியை உருவாக்க 30 ஆண்டுகள் ஆனது. James Webb Space தொலைநோக்கியை நாசா, ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கனடா ஆராய்ச்சி மையம் இணைந்து, தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில், உள்ள ஏவு தளத்திலிருந்து, Ariane flight VA256 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியுள்ளது.
6 ஆயிரத்து 500 கிலோ எடைகொண்ட இத்தொலைநோக்கி 20 மீட்டர் நீளமும், 14 மீட்டர் அகலமும் கொண்டு தங்க முலாம் பூசிய சோலார் பேனல்கள், சூரிய ஒளி எதிர்ப்பு தகடுகள் போன்றவற்றை உள்ளடக்கி மைனஸ் 270 டிகிரி குளிரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாத பயணத்திற்கு பிறகு, 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடந்த பின்னர் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இது, வெகு தொலைவில் உள்ள நட்சத்திரம், கிரகங்கள் மற்றும் அண்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பூமி உருவான விதம், சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள கிரகங்கள் குறித்த தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1990-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட Hubble தொலைநோக்கி 430 கிமீ தூரத்தில் பூமியை சுற்றியபடி விண்வெளியை ஆராய்ச்சி செய்து வந்தது.
ஆராய்ச்சியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் அதன் திறன் இல்லாததால் James Webb தொலைநோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
Discussion about this post