திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக்கடையில், கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அருகே இருந்த 4 கடைகளும் தீக்கிரையாகின.
காந்தி மார்க்கெட் பிரதான நுழைவாயில் உள்ள டீக்கடையில், காலை 6 மணியளவில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால், அந்த டீக்கடையிலும், அருகே இருந்த 5 கடைகளுக்கும் தீ பற்றியது.
தீ மளமளவென பற்றி எரிந்ததால், மற்றொரு சிலிண்டரும் வெடித்துள்ளது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 2 வாகனங்களில் விரைந்து, கொளுந்துவிட்டு எரிந்த தீயை போராடி முழுமையாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், டீக்கடை, பலகார கடை, தேங்காய் கடை, பெட்டிக்கடை ஆகிய 4 கடைகள் முழுவதுமாக தீக்கிரையாகின. 2 கடைகளில் இருந்த பொருட்கள் சேதமானது.மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேஸ் சிலிண்டருக்கு செல்லும் குழாயில் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் காந்தி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Discussion about this post