இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் செலவில் நான்கு இடங்களில் கல்லூரிகள் துவங்க அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 20 ஆயிரத்திற்கும் மேலான கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை என்றும் கோயில் நிதியின் உபரி நிதியை, போதிய நிதி இல்லாத பிற கோயில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இது அரசின் கொள்கை முடிவு என்றும், இன்னும் 3 வாரங்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் எனத் தெரிவித்தார். வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடிப்படை நடைமுறைகள் பின்பற்றாமல் துவங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டனர்.
நான்கு கல்லூரிகள் தவிர, அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் புதிய கல்லூரிகளை துவங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள்,நான்கு கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் துவங்க வேண்டும் எனவும், கல்லூரி துவங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர்.பின்னர் மனுவுக்கு 3 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 5 வாரங்கள் தள்ளிவைத்தனர்.
Discussion about this post