பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், திமுக அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, எந்த தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோ, அந்த தொழிலுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்கும் அரசாக மாறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார். 2020ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் பிரிவு 22ல் உள்ள இரண்டாவது அட்டவணையில், தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது என்றும், ஆனால், சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதை கருத்தில் கொண்டு, பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கண்ட செய்தியின் கூடுதல் தகவல்களை செய்தியாளர் வழங்க கேட்டுப்பெறலாம்.
↕↕↕ ↕↕↕
Discussion about this post