தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதிகளை வழங்க இடைக்கால தடை விதிக்கக் கோரிய வழக்கில், திமுக அரசு பதிலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவர், தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவில், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வு நடத்தப்படாது என தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு அளித்த வாக்குறுதிகளால் மாணவர்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்ததாக கூறியுள்ளார்.
இதனால், மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இனி பொது இடங்களில் நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதியை அளிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாயும், மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கேட்டு கொண்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள், திமுக அரசு இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post