டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அமைச்சரின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விழுப்புரம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை திமுக அரசு முடக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
கல்வியில் பின் தங்கிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை திமுக அரசு தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் எனத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கல்வித்துறையில் தாம் மறையும் வரை புரட்சி ஏற்படுத்திய புரட்சித் தலைவி ஜெயலலிதாவிற்கு புகழ் சேர்க்கும் வகையில் விழுப்புரத்தில் அவரது பெயரில் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதாக கூறினார்.
ஆளுநர் ஒப்புதலோடு தொடங்கப்பட்ட டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முடக்க திமுக அரசு தொடர்ந்து சதி செய்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்கும் நடவடிக்கைகளில் திமுக ஈடுபட்டு வருவதாகவும் அவர் சாடினார்.
Discussion about this post