சென்னையை அடுத்த கொரட்டூரில் கந்து வட்டி கொடுமையால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், 11 லட்ச ரூபாயை கொடுத்துவிட்டு 33 லட்ச ரூபாய் வட்டி வசூலித்த திமுக பிரமுகர் கைது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே 40 ஆண்டு காலமாக மளிகை கடை நடத்தி வந்த செல்வகுமார் தான், திமுக பிரமுகரின் கந்து வட்டி கொடுமையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டவர். தலைமுறை தலைமுறையாக மளிகை கடை நடத்தி வரும் இவர், தனக்கு ஏற்பட்ட கடன் பிரச்னையை சமாளிக்க திமுக சென்னை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தண்டல் தியாகராஜன் என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன் 11 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்.
இதேபோல் தண்டல் தியாகராஜனின் நண்பர் பிரகாஷிடம் 4 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. செல்வகுமார் தான் வாங்கிய 11 லட்ச ரூபாய் கடனுக்கு 2 ஆண்டுகளில் மட்டும் தண்டல் தியாகராஜனுக்கு வட்டியாக 33 லட்ச ரூபாய் வரை வட்டி கொடுத்திருப்பதாகவும், பிரகாசுக்கு 10 லட்ச ரூபாய் வட்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வியாபாரம் சரியாக இல்லாத நிலையில் வட்டி கட்ட முடியாமல் செல்வகுமார் தவித்து வந்துள்ளார். ஆனால் தினமும் கடை வாசலுக்கு வந்த திமுக சென்னை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தண்டல் தியாகராஜன் மற்றும் பரகாஷ் ஆகியோர் மேலும் 20 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பணத்தை தர முடியாவிட்டால் வீடு மற்றும் கடையை தங்களது பெயருக்கு எழுதி தர வேண்டும் என்று மிரட்டியதாகவும் செல்வகுமாரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திமுக சென்னை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தண்டல் தியாகராஜனின் தொடர் மிரட்டல் மற்றும் அவமானம் தாங்காததால் மன உளைச்சலுக்கு உள்ளான வியாபாரி செல்வகுமார் தனது கடைக்குச் சென்று தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்து இருக்கும் கடிதத்தில், கந்து வட்டி கேட்டு தன்னை அடிக்கடி தொல்லை செய்து கொண்டே இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் கொரட்டூர் திமுக மாவட்ட வர்த்தக அணி பிரமுகர் தண்டல் தியாகராஜா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்த கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் திமுகவின் அராஜக முகம் வெளிச்சத்திற்கு வந்து இருப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
Discussion about this post