காஞ்சிபுரத்தில் தமிழ் பேராசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், 50 கோடி சொத்துக்கு அதிபதியான அரிசி ஆலை அதிபரை போலீசார் பொறி வைத்து பிடித்து கைவிலங்கு பூட்டினர்.
ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் பேராசியராக பணியாற்றி வந்தவர் அனிதா. 40 வயது முதிர் கன்னியான இவர், அக்கா வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு அனிதாவின் அறையில் இருந்து அலறம் சத்தம் கேட்டுள்ளது. வீட்டின் கீழ் தளத்தில் இருந்த அனிதாவின் சகோதரி அவரை தொடர்பு கொண்டபோது, ”பயமா இருக்கு” என்ற அலறலோடு அவரது செல்போன் துண்டிக்கப்பட்டுள்ளது.
பதற்றம் அடைந்த சகோதரி, மாடியில் இருந்த அனிதாவின் அறைக்கு விரைந்தார். அறை, உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. எவ்வளவு தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. பூட்டை உடைத்து அறைக்குள் சென்ற போது அங்கு காண நேர்ந்த காட்சி அனிதாவின் சகோதரியை நிலை குலைய செய்தது. உடலில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார் அனிதா. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அனிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மார்பக பகுதியில் கத்தி பாய்ந்து இறந்தாக சொன்னது பரிசோதனை முடிவுகள். அவரை அவரே மார்பில் குத்திக் கொள்ள வாய்ப்பில்லை என்பதால் அனிதாவின் மரணம் கொலை என்பதை உறுதி செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேட தொடங்கினர். ஆதி, அந்தம் தெரியாமல் இருந்த அந்த கொலை வழக்கில் போலீஸ் கையில் இருந்த ஒரே தடயம், அனிதா அறையில் இருந்து எடுக்கப்பட்ட கிழிந்த டி ஷர்ட்டின் பாக்கெட்டும் அதில் இருந்த நெல் மணியும்.
அனிதாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவர் கடைசியாக தொடர்பு கொண்ட எண்ணை எடுத்தனர். அது அரிசி ஆலை அதிபரான சுதாகர் என்பவரின் எண். அறையில் கிடைத்த நெல்மணி இருந்த டிஷர்ட்டின் பாக்கெட் அரிசி ஆலை அதிபருடையதாக இருக்கலாம் என எண்ணிய போலீசார் அவரை தனது பாணியில் சிறப்பாக கவனித்தனர்.
இதையடுத்து சுதாகர், அனிதாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். 10 ஆண்டுகளாக அனிதாவை துரத்தி துரத்தி காதல் பயிர் வளர்த்த அவர், அவரை வளைக்க வேண்டும் என்பதற்காகவே 50 கோடி ரூபாய் சொத்தை விட்டு விட்டு ,10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பார்ட் டைம் உடற்கல்வி ஆசிரியராக அவரது கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சுதாகரின் இந்த சதியை தியாகம் என அனிதா நம்ப அவர்களின் காதல் களணியில் பாசனம் செழிக்க தொடங்கியுள்ளது.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சுதாகர் தன்னை போல பல பெண்களை வலையில் வீழ்த்தி களியாட்டாம் ஆடியது அனிதாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து அனிதா அவரை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அனிதாவின் அறைக்குள் புகுந்து அவருடன் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குற்றத்தை சுதாகர் ஒப்புக் கொள்ள போலீசார் அவரை கைது செய்தனர்.
Discussion about this post