கல்விக் கட்டண பாக்கியை கட்டுமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் வற்புறுத்துக் கூடாது என அறிவுறுத்தக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சில கல்விக் கட்டண பாக்கியை செலுத்த பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் கல்விக் கட்டண பாக்கியை சுட்டிக்காட்டி, சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண பாக்கியை தள்ளுபடி செய்து, ஆன்லைன் வகுப்புகளை திறமையான முறையில் நடத்த, மாற்று நடைமுறைகளை கண்டறியவும், குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக அடுத்த வாரத்திற்குள் பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
Discussion about this post