பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கெபிராஜிடம், சிபிசிஐடி போலீசாரின் 2 நாள் விசாரணை முடிந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்காப்பு பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கெபிராஜ் கடந்த 30ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையம் மற்றும் கெபிராஜின் இல்லம் உள்ளிட்ட சில இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று, 4 மணிநேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடத்தினர். ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பியபோது, காரில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்த நிலையில், அதுதொடர்பாகவும் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடைபெற்றது. எத்தனை மாணவிகள் மற்றும் இளம்பெண்களுக்கு அவர் பயிற்சி அளித்தார் என்ற தகவல்களும் திரட்டப்பட்டன. இந்த விசாரணையின் போது, கெபிராஜ் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் சிபியூ, ஹார்டுடிஸ்க் உள்ளிட்ட முக்கிய சாதனங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார், தொடர்ந்து கெபிராஜ் மனைவியிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து கெபிராஜை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகம் அழைத்துச் சென்று, அங்கு வைத்து விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து, 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து, கெபிராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்
Discussion about this post