திமுக ஆட்சி தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்வதற்கு ஆயிரம் கொடுமைகள் இருந்தாலும், அதில் முக்கியமானது மின் வெட்டு. ஆம்… ஒரு நாளுக்கு 16 மணி நேர மின்வெட்டு ஏற்படுத்தியதே 10 ஆண்டுகளுக்கு முன் திமுகவின் பீஸ் பிடிக்கப்பட்டதற்கு காரணம். இந்த நிலையில், 10 ஆண்டுகள் கடந்தாலும் பழசை மறக்காத திமுக மீண்டும் மின்வெட்டு விளையாட்டை தொடங்கி இருக்கிறது.
கிரைண்டரில் மாவு பாதி அரைத்த படி மின்சாரத்தை எதிர்பார்த்து வீதியில் உட்கார்ந்திருக்கிறார்கள் விழுப்புரத்தை சேர்ந்த பெண்கள். மின் விசிறி ஓடாததால், கை விசிறியே துணை என காற்று வாங்க கிளம்பி விட்டார்கள் ஊர் தாத்தாக்கள். மின் அடுப்பில் வைத்த அரிசி வெந்தும் வேகாமல் எடுத்து சாப்பிடுவதாக குமுறுகிறார் விராலி மலையில் உள்ள மூதாட்டி ஒருவர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 6 முறை மின் வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மின்வெட்டு ஏற்படுவதால் நீர் பாய்ச்ச கூட வழியின்றி பல ஏக்கர் பயிர்கள் கருகுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
ஊரடங்கால் ஏற்கனவே பொருளாதாரம் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் அதள பாதாளத்தில் இருக்கையில் கோடை கால பரிசாக அரசு தந்து வரும் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு குறு தொழிற்சாலைகள் நாளில் பாதி நேர்ம மயான அமைதியில் இருக்கின்றன.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிலேயே அடைக்கலம் ஆகும் சூழல் உள்ளது. இந்த நிலையில் தொடர் மின்வெட்டால் எதிர்கால தலைமுறையின் கல்வியும் காணல் நீராகும் ஆபத்தில் உள்ளதாக அஞ்சுகிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்.
இதற்கெல்லாம் உச்சமாக அரசு விழாவில் மின்தடை ஏற்பட்டதால், அமைச்சரே செல்போன் வெளிச்சத்தில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. 30 நாளுக்கே மெழுகுவர்த்தி தேடி அலையும் நிலை எனில் 5 ஆண்டு காலத்தை எப்படி கடக்க போகிறோம் என அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் அப்பாவி மக்கள்.
Discussion about this post