தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்துவதற்காக ஆர்வத்தோடு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்டப்பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள பெதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இனாம்கிளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு தடுப்பூசி கையிருப்பு இல்லை என சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக நீண்ட தூரத்தில் இருந்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நகர் நல மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக அதிகாலை முதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தநிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் நகர் நல மையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை விரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post