தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில், மீன் வாங்க அசைவப்பரியர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி ஒரு நாள் மட்டும் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை காசிமேட்டில் புதியதாக அமைக்கப்பட்ட மீன் விற்பனை தளத்தில் அதிகாலை முதலே மீன் விற்பனை களைகட்டியது. பாதுகாப்பான இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட மக்கள் மீன்கள் வாங்குவதில் மட்டும் ஆர்வம் செலுத்தினர்.
ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் அதை கண்டுக்கொள்ளாமல் முண்டியடித்துக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர். மக்கள் அதிகம் திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில், விற்பனைக்காக மலைபோல் மீன்கள் குவிக்கப்பட்டிருந்தன. மீன்களை வாங்க சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். மீன்வளத்துறை உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற புகாரும் எழுந்தது.
திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக, மீன்கள் மற்றும் இறைச்சி விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சரம் மீன் ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பாறை மீன் 300 ரூபாய்க்கும், கட்லா மீன் 320 ரூபாய்க்கும் விற்பனையானது.இதேபோன்று, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Discussion about this post