தமிழ்நாட்டில் போதிய தடுப்பூசிகள் இருப்பில் இல்லாத போது, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தது, தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுத்துவிட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே 5ம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர், திருப்பூரில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவங்கி வைத்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இந்த திட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றால், நிச்சயம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகளே ஒத்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசின் அறிவிப்பை நம்பி, தடுப்பூசி போட வெளியே வந்த இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி இல்லாததை முன்கூட்டியே தெரிவித்திருந்தால், பொதுமக்கள், வெளியே செல்வது தவிர்க்கப்பட்டு, தொற்று பாதிப்பு குறைந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமும் முறையாக நடைபெறவிலை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதனால், ஏற்கனவே முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கவும், 18 வயதுக்கு மேற்பட்டவருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆந்திரா, பீகார், மேற்குவங்கம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள், தமிழ்நாட்டை விட அதிக தடுப்பூசிகள் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post