சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க அசைவப்பரியர்கள் குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காசிமேடு துறைமுகத்தில் பழைய மீன்பிடி ஏலக்கூடம் மூடப்பட்டது. இந்த நிலையில், ஒரு வார முழு ஊரடங்கையொட்டி, இன்று இரவு 9 மணி வரை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, காசிமேட்டில் புதியதாக அமைக்கப்பட்ட மீன் விற்பனை தளத்தில் அதிகாலையிலே மீன் விற்பனை களைகட்டியது. நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் காசிமேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பான இடைவெளி இல்லாமலும், முககவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் அதை கண்டுக்கொள்ளாமல் முண்டியடித்துக் கொண்டு மீன்களை வாங்குவதிலேயே கவனமாக இருந்தனர். இதனால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆம்பூரில் மார்க்கெட் பகுதியில் மளிகை, காய்கறி, இறைச்சி வாங்க பொதுமக்கள் குவிந்தனர். நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்களை வாங்க மக்கள் கடை வீதிகளுக்கு படையெடுக்க தொடங்கினர். குறுகலான மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பான இடைவெளியின்றி மக்கள் திரண்டதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post