பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பன்வாரிலால் புரோஹித்தை தொடர்புபடுத்தி வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று, ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
நக்கீரன் பத்திரிகை மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீமாக, ஆபாசமாக செய்திகள் வெளியிடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை மஞ்சள் பத்திரிகைக்கு ஒப்பானது என்றும், நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் என்ற தகவலும் உண்மையானது கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நக்கீரன் இதழில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆளுநர் மாளிகையின் மாண்பை குலைக்கும் வகையில் உள்ளதாகவும், நீண்ட நாட்கள் பொறுமை காத்த நிலையில், அவதூறு தொடர்ந்ததால் புகார் அளிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு மறைமுகமாக, நேரடியாக அச்சுறுத்தல் விடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள ஆளுநர் மாளிகை, எந்த ஒரு சூழலிலும் விருந்தினர் மாளிகையில் ஆளுநர் தங்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஓராண்டாக ஆளுநர் மாளிகைக்குள் பேராசிரியை நிர்மலா தேவி நுழைந்தது இல்லை, ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் யாருடனும் நிர்மலா தேவிக்கு தொடர்பில்லை என்றும் அதில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் ஒருபோதும் தங்கியதில்லை என்று கூறியுள்ள ஆளுநர் மாளிகை, காவல்துறையில் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தை சரிபார்க்காமல் நக்கீரன் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே, நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிகையில் வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Discussion about this post