வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சடலங்களை எரிக்க கூட இடம் இன்றி தவிக்கும் அவலம் தொடர் கதையாகி வருகிறது.
நாட்டில் கொரோனா பாதிப்பு 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலை தொடர்வதால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்காமல் உறவினர்கள் அவதியடைந்துள்ளனர்.
குறிப்பாக வடமாநிலங்களான டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய காத்து கிடக்கவேண்டிய நிலை உள்ளது.
உத்தரபிரதேச கங்கை நதியில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது. இவ்வாறு விடப்படும் சடலங்களை மீட்டு முறைப்படி தகனம் செய்யும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
பிரக்யாராஜ் பகுதியில் ஆற்றங்கரையோரங்களில் மேலோட்டமாக புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியில் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இத்தகைய செயல்களால் நோய் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்காததால் சாலையோரங்களில் வைத்து தீயிட்டு கொளுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கொரோனாவால் இறந்த இஸ்லாமியர்களின் உடல் அடக்கம் செய்ய போதிய இடவசதி இன்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர். வாதாலாவில் உள்ள சன்னி முஸ்லிம்களின் இடுகாட்டில் உடல் அடக்கம் செய்வதற்கு போதிய இடம் இல்லை என பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு இடங்களில் உடல் அடக்கம் செய்யுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை காப்பாற்ற போதிய ஆக்சிஜன் இல்லாமல் படும் வேதனையை விட இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் படும் துயரம் சொல்லி மாளாது என கதறுகின்றனர் இறந்தவர்களின் உறவினர்கள்…
Discussion about this post