வாணியம்பாடி அருகே, அதிமுக எம்எல்ஏ நிவாரண நிதி வழங்கிய நிலையில், ஆத்திரமடைந்த தி.மு.க. எம்எல்ஏ, சுளுக்கெடுத்து அனுப்பி விடுவேன் என அதிகாரிகளை மிரட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும், தமிழக அரசு வழங்கி வரும் கொரோனா நிவாரண நிதியை, அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்து, வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் சொந்த ஊரான பெத்தவேப்பம்பட்டு பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், அப்பகுதி மக்களுக்கு அவர் நிவாரண நிதி வழங்கி விட்டு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து கட்சியினருடன் அங்கு சென்ற திமுக திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ், அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டியிருக்கிறார். தான், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் எம்எல்ஏ அல்ல, 4 சட்டமன்ற தொகுதிக்கும் மாவட்ட செயலாளர் எனவும், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால், அதிகாரிகளை சுளுக்கெடுத்து அனுப்பி விடுவேன் எனவும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதேபோல், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக ஆந்திர எல்லை பகுதியான புல்லூர், திம்மாம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடைகளில், நிவாரண நிதி வழங்க சென்ற போது, திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகப்பன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ராமசாமி உள்ளிட்ட திமுகவினர், தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்றும் பாராமல், நிவாரண நிதி வழங்கக் கூடாது என்று வாக்குவாதம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால், நிவாரண நிதி பெற வந்த பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, நியாய விலைக் கடைகளில் நிவாரண நிதி வழங்கப்பட்ட போது, அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களே நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். ஆனால், தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள்தான் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனக் கூறி அராஜகத்தில் ஈடுபடுவது, பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post