சர்வதேச அளவில் ஒருபுறம் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், மறுபுறம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.
இத்தகைய சூழல் தொடர்ந்தால், கொரோனா தொற்றின் வீரியம் குறைந்தாலும், அது நிரந்தமாக மனித சமுதாயத்துடன் தங்கி விடும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவத் துவங்கிய போது, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், சமுதாய ரீதியான எதிர்ப்பாற்றலை உருவாக்கி விட முடியும் என நிபுணர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் இந்தியாவை உலுக்கி வரும் கொரோனாவின் 2வது அலையும், ஆசியா முதல் அமெரிக்கா வரை, தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலும் இந்நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாகப் பரவி வரும் அதே வேளையில், அதை சமாளிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
பணக்கார நாடுகள் வேகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் சூழலில், ஏழை நாடுகள் தடுப்பூசிகளை பரமாரிப்பதற்கும், விநியோகிப்பதற்கும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் திணறி வருகின்றன.
மேலும் பொதுமக்களின் அச்சம் காரணமாகவும் தடுப்பூசி செலுத்தும் பணியை ஏழை நாடுகளால் சரிவர மேற்கொள்ள இயலவில்லை.
சர்வதேச தரவுகளின் படி, இஸ்ரேல் மற்றும் கிழக்கு அமெரிக்க நாடான சிசிலிஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டன், பூடான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சுமார் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான மக்களும், ஆப்பிக்காவில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நியூசிலாந்தில் 4.4 சதவீத மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும், கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதுடன் மற்ற நாடுகள் உடனான எல்லைகளை மூடியுள்ளதால் அங்கு தொற்று பரவலின் வேகம் குறைவாக உள்ளது.
சமுதாய ரீதியான எதிர்ப்பாற்றலை உருவாக்க நீண்டகாலம் பிடிக்கும் என்பதால், இறப்பு வீதம் குறைந்தாலும் டிபி, ஹெச்ஐவி உள்ளிட்ட நோய்களைப் போல கொரோனாவும் நிரந்தரமாக, மனித சமுதாய மத்தியில் காணப்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கொரோனாவுடன் இணைந்து வாழ கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post