கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவனைகளில் படுக்கை வசதியும் இல்லாததால் நோயாளிகள் படாதபாடுபட்டு வருகின்றனர். அரசு வேலை செய்வதாக வெளியில் தெரிந்தாலும் உரிய வசதிகள் கிடைக்காமல் சாலையில் தவிக்கும் நோயாளிகளை சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. நிலைமையின் தீவிரத்தால் ஏராளமான நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் வீட்டிலிருந்தபடியே தங்கள் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்துக் கொள்ள உதவும் கருவியான பல்ஸ் ஆக்ஸிமீட்டர் விற்பனை சூடுபிடித்துள்ளது. சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை, விற்பனை அதிகரித்துள்ளது என்றும் தட்டுப்பாடு உள்ளதால், ஆக்ஸி மீட்டர்களின் விலையும் 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும், கொரோனா அறிகுறிகளுடன், பரிசோதனை முடிவுக்காக காத்திருப்போரும், அடிக்கடி ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டுமென, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.இதனால், மருத்துவமனைகளில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஆக்ஸி மீட்டர்கள், தற்போது வீட்டு முதலுதவி பெட்டியின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
இந்நிலையில் இதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் விளக்கப்பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
Discussion about this post