கடந்த சில நாட்களாக உலகை மிரட்டி வந்த சீனாவின் லாங்க் மார்ச் 5பி ராக்கெட்டின் பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது. கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றி வந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள், கடலில் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதுடன், மற்ற நாடுகளின் கோவப் பார்வையில் இருந்து, சீனாவும் தப்பித்துக் கொண்டது.
அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இணைந்து, விண்வெளியில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைத்து, ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு போட்டியாக, சீனா தனியாக டியூன்ஹி என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக, கடந்த மாதம் 29ஆம் தேதி, லாங் மார்ச் 5 பி என்ற ராக்கெட் மூலம் கலம் ஒன்றை அனுப்பியது.
குறிப்பிட்ட கலனை விண்ணில் நிலை நிறுத்தி விட்டு, பூமிக்கு திரும்பும் என சீன விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்பட்ட லாங் மார்ச் 5 பி, கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வேகமாக நகர்ந்தது.
பொதுவாக பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் எந்த பொருளும் காற்றுடன் ஏற்படும் உராய்வில் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் லாங் மார்ச் 5 பியின் பாகங்கள், அதிக உருகு வெப்பநிலையை கொண்டுள்ளதால், அப்படியே பூமியின் மீது விழலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். 22 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் குடியிருப்பு பகுதியில் விழுந்தால் கடுமையான சேதம் ஏற்படும் என்றும் தங்களது கவலையை பதிவு செய்திருந்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இதே ரக ராக்கெட், ஐவரி கோஸ்ட் நாட்டில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்து சேதப்படுத்தியது.
ஆனால் இம்முறை சீனாவை அதிர்ஷ்டம் காப்பாற்றியுள்ளது. பூமிக்குள் நுழைந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் விழுந்தன. இதனால் உலக நாடுகளின் கண்டனக் குரல்களில் இருந்து சீனா தப்பித்துக் கொண்டது. மேலும் எந்த நாட்டின் மீது விழும் என தெரியாமல் கவலையில் இருந்த சர்வதேச வானியல் நிபுணர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
Discussion about this post