சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, பாடல் என சகலத்திலும், அதில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்.. இந்த பன்முக கலைஞனின் பிறந்தநாளில் அவரை பற்றிய சிறு செய்தித்தொகுப்பை காணலாம்…
டி.ஆர் என்றால் நமது நினைவுக்கு வருவது, அவரது தாடி, ரைமிங் டயலாக், தங்கச்சி செண்டிமெண்ட், வாயிலேயே பீட்பாக்ஸ் ஸ்டைலில் மியூசிக் போடுவது, புலி ஆடியோ லான்ச்.. இளம் தலைமுறையினருக்கு அவரை பற்றிய மீம்ஸும், ட்ரோல்ஸும்தான் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நபர் டி.ஆர். என்பது தான் நிஜம்.
டி.ராஜேந்தருக்கு முதல் படம் ‘ஒரு தலை ராகம்’. படத்தின் தயாரிப்பாளரான ஈ.எம்.இப்ரஹிம் இயக்கமாக வெளியான இப்படத்தில் டி.ஆருக்கு முழு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் சரியாக வரவேற்பைப் பெறாத படம் கவனம் பெற்ற பின் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி ஹிட்டானது, ஆனால் அவரால் அனுபவிக்க முடியவில்லை. தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட டி.ஆர் அடுத்ததாக வசந்த அழைப்புகள் திரைப்படம் அவருக்கான வசந்தத்தை கொடுக்கவில்லை.. அடுத்ததாக ரயில் பயணங்களில் யார்யா இந்த டி.ஆர் என பலரையும் கேட்க வைக்கும் அளவிற்கு இருந்தது அந்த படத்தின் வெற்றி…
தொடர்ந்து தங்கைக்கோர் கீதம், உயிருள்ள வரை உஷா, உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதிலி, ஒரு தாயின் சபதம் என 80களில் தொடர் வெற்றி படங்கள்… காதலோ, தங்கை சென்டிமென்டோ, சண்டைக்கு முன்னாடி பேசும் வசனமோ, எதுவாக இருந்தாலும் டி.ஆரின் அந்த ரைமிங் டச்சும் வேற லெவலில் இருக்கும்.
இன்று இதை பார்க்கும் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் உச் கொட்டலாம், ஆனால் 70ஸ் கிட்ஸ் இன்றும் கலங்க வைப்பார் டி.ஆர். முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் தாடி, பொசு பொசுவென சிலுப்பிக் கொள்ளும் முடி என ஹீரோவுக்கென எந்தப் பெரிய அடையாளமும் இல்லாமல் வந்து ஹீரோவாகவும் ஜெயித்ததில் இருக்கிறது அவரின் வெற்றி. ஒரு படம், இரண்டு படம் இல்லை கடைசியாக நடித்த கவண் வரை இதே தோற்றம்தான்.
கதாசிரியர், இயக்குநர், நடிகர் என முத்திரை பதித்தவர் இசையமைப்பாளராக பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார். வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது, கூடையிலே கருவாடு, அமைதிக்கு பெயர் தான் சாந்தி, என் ஆசை மைதிலியே, ஒரு பொன்மானை நான் காண, தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி… இன்னும் ஏராளம்…
டி.ஆர். பற்றிய கேலி, கிண்டல் எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு சினிமாவில் அவரின் உழைப்பைப் பார்த்தால், அது சினிமாவில் சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்ககூடியது… வீராசாமி எடுத்தவர் தானே என்று டீல் செய்தாலும், மீம்ஸ் போட்டாலும் தன் வெற்றியாலும், உழைப்பாலும் தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் இந்த டி.ஆர் என்பது உண்மையே…
Discussion about this post