அருள் வாக்கு கோரும் அப்பாவி மக்களுக்கு அடி உதை கொடுப்பதும், கோயிலுக்கு வரும் பெண்களிடம் முத்தம் கேட்டு சல்லாபம் செய்வதும் என, ஊரார் துணையுடன் ஓராண்டாக சைக்கோ சாமியார் அரங்கேற்றி வந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பதைபதைக்க செய்யும் கொடூரத்தை, பதற்றமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த பக்திமானின் பெயர் அனில்குமார். குறி கேட்க வருபவர்களை அடிமையை போல அடித்து உதைப்பது; பெண்கள் என்றால் முடியை பிடித்து இழுத்து சித்தரவதைக்கு உள்ளாக்குவது; முகத்தில் காரி உமிழ்ந்து கேவலப்படுத்துவது; இதுதான் இந்த மிருகத்தின் அகராதியில் பக்தி.
மது, புகை சகிதமாக கோயிலுக்குள் வலம் வரும் இந்த திருநீறு மிருகம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும், பலகீன இதயங்கள் பார்க்க முடியாதவை. அருள் வாக்கு மட்டுமல்ல; கை, கால், இடுப்பு வலிக்கும் இவரிடம் நிவாரணம் கேட்டு வருகிறார்கள், மூடர்கூடத்தின் பிரதி நிதிகள். அப்படி வருபவர்களை, குறைந்தது ஒரு மணி நேரமாவது கடித்து குதறுகிறது இந்த வேட்டை நாய்.
வந்தவர்கள் வலியில் அலறித் துடிப்பதை பார்க்கும் நமக்கே ரத்தக் கண்ணீர் வருகிறது எனில்… அவர்களை அழைத்து வரும் உறவினர்கள், இந்த சித்திரவதைகளை எல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
வேண்டுதலோடு ஆண்கள் வந்தால், சாமியாருக்கு கால் பிடித்து விடுவது கட்டாயப் பணியாக வழங்கப்படுகிறது. அதை அர்பணிப்புடன் செய்யத் தவறும் பட்சத்தில், மிருகத்தின் கைகளில் இருக்கும் பிரம்பு, எதிரில் இருப்பவரின் முதுகை பதம் பார்க்கிறது.
பெண்கள் என்று வந்து விட்டால், இந்த மிருகம் பல வழிகளிலும் எல்லை மீறுகிறது. அதிலும், இளம் பெண்கள் என்றால் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்யும் இந்த சல்லாப சைக்கோ, அதற்கு உடன்பட மறுக்கும் பெண்களை பலவந்தமாக முத்துமிட்டு இச்சையை தீர்த்துக் கொள்கிறது.
எல்லாவற்றிற்கும் உச்சமாக, முடியை பிடித்து தரதர வென இழுத்து, முதுகின் விலாவில் காலால் மிதிக்கும் காட்சிகள் எல்லாம் நரகத்தின் நகல்கள்.
இத்தனை கொடூரமும் திரைமறைவில் நடக்க வில்லை. பட்டப்பகலில் பலர் முன்னிலையில்தான் அரங்கேறுகிறது. ஆனால், ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. மாறாக, சாமியாரின் கொடூரங்களை தலைவணங்கி ஏற்கிறார்கள். இளகிய மனம் கொண்ட ஒருவர், சித்திரவதை கூடத்தின் செயல்பாடுகளை மொபைலில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்ற, திருநீறு மிருகம் இப்போது சிறையில் உள்ளது.
சாமியாருக்கு தண்டனை கிடைத்துவிட்டது. அதை மெளனமாக வேடிக்கை பார்த்த மூடர் கூடத்திற்கு யார் தண்டனை தருவது….? இந்த சம்பவத்தை பார்த்தாவது அவர்கள் திருந்தினால் நல்லது….
Discussion about this post