கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்தநிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தடுப்பூசி விலை உயர்வை சுட்டிக்காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 3 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தவேண்டிய தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையும், தற்போதைய விலையும் மாறுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் விலையை சில மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் இந்த விலை உயர்வு மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். தடுப்பூசி திட்டத்திற்காக 2021-22 நிதியாண்டில் 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் ஆராய வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post