தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72 புள்ளி 78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அரியலூர் மாவட்டத்தில், 82.47 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொகுதிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குளித்தலையில் 86.15 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட போடிநாயக்கனூர் தொகுதியில் 73.65 சதவீதம் பதிவாகியுள்ளது. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் 71.04 சதவீத வாக்குகளும், அமைச்சர் தங்கமணி போட்டியிட்ட குமாரபாளையம் தொகுதியில் 78.81 சதவீதமும், அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதியில் 76.94 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Discussion about this post