தேர்தல் பிரசாரத்தின் போது, பெண்களின் உடல் அமைப்பு குறித்து திமுக பேச்சாளர் தெரிவித்த ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பண்ணைகளில் ஃபாரின் மாடுகளில் மெஷின் மூலம் தான் பால் கறப்பதாகவும், இதனை பெண்கள் குடிப்பதால் தான் பெண்களின் உடல் வடிவம் மாறிவிட்டதாக நக்கலடித்தார். இவரது ஆபாச பேச்சு, அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களை இழிவுப்படுத்தி திமுக பேச்சாளர் பேசியிருப்பதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், பொது இடத்தில் நாகரீகமின்றி பெண்களை கொச்சைப்படுத்திய திமுக பேச்சாளரின் செயல், திமுகவின் பரம்பரை குணம் என்று விமர்சித்துள்ளார். இத்தகைய ஆணாதிக்க மனோபாவ நபர்கள் குறித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி என்ன கூற விரும்புகிறார் என பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெண்களை இழிவுபடுத்தி பேசியிருக்கும் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ’பெண்’ என்ற அமைப்பின் நிறுவனர் சுபாஷினி, கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
Discussion about this post