புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அளவை 7 நாட்களாக குறைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சி தொடங்க, இரண்டு தேசிய நாளிதழ்களில் அறிவிப்பை வெளியிட்டு 30 நாட்களுக்கு பிறகு இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென்ற விதி அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில், 30 நாட்கள் என்ற கால அளவை 7 நாட்களாக குறைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக புதிய அரசியல் கட்சி தொடங்குபவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த கால அளவை குறைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்த இந்த புதிய விதிமுறையின் படி, பிப்ரவரி 26ம் தேதிக்கு முன்பாக விளம்பரம் பிரசுரித்தவர்களும் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post