நாமக்கல்லில், கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கொள்ளையர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்…
நாமக்கல் அருகே சேற்றுக்கால் மாரியம்மன் கோயிலுக்கு நள்ளிரவில் வந்த மூன்று நபர்கள், அங்கு பணியில் இருந்த காவலாளியை, அருகில் இருந்த ஒரு அறையில் அடைத்து பூட்டி விட்டு, கோயிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரொக்கப்பணம், சுவாமியின் மீது இருந்த வெள்ளிக் கிரீடம், தாலிக்கொடி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கீரம்பூர் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், 3 இளைஞர்கள் கட்டுகட்டாக பணத்தை எண்ணிக்கொண்டிருந்தது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஊர் மக்களுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த ஊர் மக்கள், மூவரையும் பிடித்து கை கால்களை கட்டிப்போட்டனர்.
பிறகு அவர்கள் கொண்டு வந்த துணி முடிச்சுக்களை அவிழ்த்துப் பார்த்ததில், அம்மன் சிலையின் கீரீடம், ரொக்கப்பணம் ஆகியவற்றை பார்த்து கொத்தித்த ஊர்மக்கள், மூவருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.
சிறிது நேரம் கழித்து, மூன்று திருடர்களும், ” எங்கள அட்டிச்சிட்டிங்கள்ள, நாங்கள் வெளியே வந்ததுக்கு அப்புறம் இந்த ஊர் எப்படி பதறும் என்று பாருங்கள், மதுரைல எத்தனை தலையை கழட்டிருக்கோம்” என்று பொங்கி எழுந்தனர்…
மேலும். போலீஸ் வந்தாலும் கை கால்களை தான் உடைக்க முடியும், தூக்கில் போட முடியாது, முடிந்தால் கொல்லுங்கள் பார்ப்போம் என, மதுரை பாணியில் அங்கிருந்தவர்களை அடுக்கடுக்காக மிரட்டிப் பார்த்தார்கள் அந்த இளைஞர்கள்.
இதில் பொறுமை இழந்த ஊர்மக்கள், மூவரையும் பின்னி எடுத்தனர்…
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், அந்த 3 இளைஞர்களையும் பரமத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், மூவரும் மதுரையை சேர்ந்த ராசு, முருக சூர்யா, கருப்பசாமி என்பதும், மூவரும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
Discussion about this post